Monday, 9 November 2020

ஏழையின் தீபாவளி கவிதை

          ஏழையின்‌ தீபாவளி 



தின்னவே வழியில்ல 

தீபாவளி நமக்கு எதற்கு!

பஞ்சத்துக்கு பிறந்தோம்- நாம் பண்டிகை தான் நமக்கு எதற்கு…


என..


 பிள்ளைகளை பெத்தவங்க

சோகத்துல சொல்வாங்க..

சேலை வாங்கித் தரும்

முதலாளி அம்மாவிடம்..

பிள்ளைக்கு வாங்கணும்

 பணமாய் கொடுத்துடுங்க..

என

 கெஞ்சி வாங்கி வரும்

கொஞ்ச பணத்தில தான்

புது துணி எடுக்க

சீமைக்கு செல்வாங்க..


பட்டாசு கடைகளையே

பராக்கு பார்த்து வரும்

பத்து வயது மகனை

கட்டியணைத்தபடி

கண்ணீரில் 

நனைத்திடுவாள்.

வக்கற்ற அவள் அன்னை...


அவள் கண்ணீர் துளி பட்டு

பட்டாசும் நமத்து விடும்..

 பட்டாசு வெடித்தது போல்

பாவி மனம் படபடக்கும்…


அலுத்து சலுத்துவரும்

 அப்பாவின் முகம் கண்டு

பட்டாசு ஆசையெல்லாம் 

பரண் மேல் போட்டிடுவான்

பத்து வயது ஏழைமகன்.


கூலிக்கு மாரடிக்கும்

ஏழையின் மகனடா..

கதியின்றி‌ நானடா

இது உனக்கு 

விதி செய்யும் சதியடா..

என 

உறங்கும் மகனைக் கண்டு

உளறல் செய்துவிட்டு

வாங்கித் தர வழியின்றி 

வாய்விட்டு அழுதிடுவான்

வக்கற்ற தந்தையவன்...


போனஸ் பணம்

 வாங்கிக்கொண்டு..

போரில் வென்றவன் போல்

நெற்றி வியர்வை தந்த

வெற்றிக்களிப்பில்

குதுகலம் கொண்டிடுவான்..


ஆசை மகனை

கையில் பிடித்துக் கொண்டு..

பண்டிகை கொண்டாட

 நம்பிக்கை வந்தது போல்

பட்டாசு கடைக்கு

சிட்டாய் பறந்திடுவான்..



பட்டாசை பார்த்ததும்

பட்டாம் பூச்சியைப் போல்

பரவசத்தில் பறந்திடுவான்

பத்து வயது பரந்தாமன்..


ஆசை மகனை 

வீட்டில்விட்டுவிட்டு

கையிருப்பு குறைவதற்குள்

கட்டிய மனைவிக்கு

சேலை வாங்க சென்றிடுவான்.


வீதியோர கடைதனிலே

பேரம் பேசி வாங்கி வந்த

கனகாம்பர புடவையினை

கனகாவிற்கு கொடுத்திடுவான்…


புடவையை கண்டதும்..

வெட்கப் புன்னகையை

பரிசாய் தந்து விட்டு

மாமனுக்கு வாங்கி வைத்த

வேட்டி சட்டையினை

கையில் திணித்திடுவாள்..


காசில்லா நேரத்தில்

எனக்கு எதற்கு வேட்டி என

செல்லமாய் திட்டிவிட்டு

மெல்லமாய் கொஞ்சிடுவான்..


ஓடிஓடி உழைத்தாலும்

கஷ்டப்பட வைத்தாலும்

பண்டிகை

தான் நமக்கு

சந்தோஷத்தை 

அள்ளித் தரும்..


இந்த 

ஒருநாள் 

சந்தோஷத்துல

வருடம் முழுதும் பட்ட‌வலி

பறந்தே போய் விடும்.


கண்டதையும் குழப்பாம

கண் மூடி தூங்கு மாமா..

விடிந்ததும் தீபாவளி

எண்ணெய் தேச்சு

குளிச்சிடுவோம்

பீடையெல்லாம்

 ஒழிச்சிடுவோம்..


புத்தாடை கட்டிக்கிட்டு

பட்டாசு கொளுத்தி விடும்

பரந்தாமன் அழகை பார்த்து

மகிழ்ச்சியில் திளைத்திடுவான்..


இட்லிக்கு கறி குழம்பும்

பலகார பட்டணமும்

வருடத்துக்கு ஒருமுறைதான்

சாப்பிட வா மகனே!

என‌ செல்லமாய் அழைத்திடுவான்..


பட்டாசு வெடித்த

பரவச சந்தோசத்தில்

முத்தம் மொத்தத்தையும்

அப்பாவிடம் தந்திடுவான்…


பண்டிகை கொண்டாடிய

சந்தோஷப் பெருமூச்சில்

மருதாணி கைகளில்

முகம் புதைத்து தூங்கிடுவான்..


பகலும் முடிந்தது

பண்டிகையும் முடிந்தது

கனகா ஒரு பக்கம்

கட்டியவன் ஒரு பக்கம்

உழைக்க ஓடுகிறார்கள்

அடுத்த பண்டிகையை எண்ணிக்கொண்டு…


பண்டிகை தான் நமக்கு

சந்தோஷத்தை அள்ளித் தரும்










































Saturday, 7 November 2020

ஆண் பெண் நட்பு கவிதை

         அவளுக்கு அவன்...

உயிர் வாசம் 

தீண்டும் உன்னத உறவு…


காதல் வாசமில்லா

 கண்ணிய உறவு…..


அவளுக்குள் இருக்கும் ஆண்மையாய்

 அவன்...

அவனுக்குள் இருக்கும் பெண்மையாய் அவள்…


அவள் எழுத்தின் உயிர்ப்பாய் அவன்..

அவன் எழுத்தின் இயக்கமாய் அவள்..


அவள் நட்பின் இலக்கணமாய் அவன்.

அவன் நட்பின் காதலாய் அவள்.


அவள் மனதில் தமிழாய் அவன்

அவன் மனதில் தேவதையாய் அவள்.


அவளுக்கு புரியாத புதிர் அவன்

அவனுக்கு விடை தேடும் விந்தை அவள்.


அவனும் அவளும்

தோழனும் தோழியுமாய்..



என்னவனோடு நான் ..கவிதை

 என்னவனோடு நான்


நீ படிக்கும் புத்தகத்தின் 

காப்பியத் தலைவியும் 

*நானே...*


நீ வரையும் 

ஓவியத்தின்

உயிரோட்டமும்

*நானே* ....


நீ செதுக்கிய 

சிற்பத்தின்

 முழு உருவமும்

 *நானே* ..


நீ மீட்டிய

 வீணையின்

மெல்லிசையும்

 *நானே* ....


உன் பேனாவில்

பிரசவிக்கும்

குழந்தையும் 

 *நானே....* 


உன் கற்பனை கலவிக்கு

கருப்பொருளும்

 *நானே* ..


உன் இளமையை மீட்டெடுக்கும்

நினைவுகளும் 

 *நானே* ...


அத்தனை

 கர்வமடா

 *எனக்கு* ...

    உன்னுடைய அத்தனையும்

 *நானாகி* போனதனால்......

             

     

தமிழுக்குள் நுழைந்து

பிழைகளை கடந்து

கடுந்தவம் புரிந்து

வார்த்தைக்குள் உழன்று

 மெதுவாக எழுந்து..

அண்ணாந்து நிற்கின்றேன்..


    உன் கைப்பிடித்து 

பயணிப்பேன்        

உச்சத்தை அடைய....

              

இப்படிக்கு

என்னவனின்

 மனதிற்குள்

கர்வத்துடன் நான்.

அன்புள்ள அப்பா கவிதை

 அப்பாவின் அழகு

       

அன்புள்ள அப்பா..


உலகமே தெரியாமல் 

உன் உள்ளங்கையை 

பிடித்துக்கொண்டு

 உலாவந்த நாட்களெல்லாம்

இறைவன் தந்த வரம்…


கேட்டதெல்லாம் வேணுமின்னு

 ஒத்தக் காலில் நின்னு கேட்டு அடம்பிடித்த தருணம் எல்லாம்..

வாங்கிக் கொடுத்து 

அழகு பார்க்கும் 

அப்பாவின் மனசு

அழகோ அழகு….


அம்மாவிடம் திட்டு வாங்கி

சாப்பிடாமல் அடம் பிடிக்க...

அம்மாவை திட்டிவிட்டு...

ஊட்டிவிடும் 

அப்பாவின் பாசமோ

அழகோ அழகு..


கல்லூரிப் பேருந்து

 தாமதிக்கும் நிமிடமெல்லாம்..

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு கால்கடுக்க காத்திருக்கும்

அப்பாவின் பயமோ..

அழகோ அழகு..


மணமகளாய் அலங்கரித்து

தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளையின் கை பிடித்து

மௌனித்த சில நிமிடம்

அழகோ அழகு…


என் பிள்ளையை பெற்றெடுக்க

பிரசவத்தில் நான் துடிக்க..

பச்சை குழந்தை போல்

 பரிதவித்த  என் அப்பா

அழகோ அழகு…



கதைகள் சொல்லி

 என்னை கண் அயர வைத்தவரே..


தோலில் தூக்கிக்கிட்டு

 தொலைதூரம் நடந்தவரே..


தூளி ஆட்டிகிட்டு

தூங்காமல் நின்றவரே…


தாரைவார்த்த பின்னும்..

நெஞ்சில் சுமந்தவரே..‌.


உங்கள் இளவரசியாய்

வாழ்ந்த இருபது வருடமும்

பொக்கிஷமாய் 

வைத்துப் போற்றப்பட

 வேண்டிய நாட்கள்

                   அப்பா



காதல் கவிதை

 

காதல் கவிதை

நிலவொன்று துணையிருக்க

பக்கத்தில் நீ இருக்க..

ஏக்கத்தில் நான் இருக்க….

கண்ணோடு கண் பார்த்து

சொர்க்கத்தை நீ உணர்த்த

ஆழ்மனது ஆசையெல்லாம்

அள்ளித் தெளித்திருக்க…

மொழி பேச வழியின்றி

விழி பேச மொழியின்றி...

உறவை நினைத்து..

உணர்வை அடக்கி….

கண்ணீர் நனைத்து..

இரவைக் கடந்தோம்...


Friday, 6 November 2020

சிங்கப்பெண்ணே கவிதை

 பெண் உலகம்…


பூ வாசல் திறந்துகொண்டு

பூவுலகை பார்ப்பதற்குள்

கள்ளிப்பாலை ஏந்திக்கொண்டு

கிழவியவள் காத்திருப்பாள்….


கள்ளிப்பாலில் தப்பித்து

தாய்ப்பாலை அருந்துகையில்

முதல் போராட்டத்தில்

வெற்றி வாகை சூடிடுவாள்……


தாவணியை தந்துவிட்டு

பள்ளிக்கு தடை போடும்

பட்டிக்காட்டு அப்பாவிடம்

கெஞ்சிக் கூத்தாடி

பள்ளிக்குச் சென்றிடுவாள்….


பத்தாம் வகுப்பிலேயே

பரிசம் போட்டு விட

படிக்காத மாமன் மகன்

தட்டோடு வந்திடுவான்….


உயர் படிப்பு படிக்க வேண்டி

உதறித் தள்ளிவிட்டு

ஊரை எதிர்த்துக் கொண்டு

கல்லூரிக்கு சென்றிடுவாள்….


வண்ண வண்ண கனவுகளுடன்

பட்டம் பெற்றிடவே

விடுதியில் தங்கி

வீரநடை போட்டிடுவாள்…..


தங்க மகளின்

பூங்கனவை கலைத்திடவே

தகாத கூட்டம் ஒன்று

தரம் கெட்டு அலைந்திடுமே…


பெண்மையை சீண்டும்

மிருகக் கூட்டத்தை

பார்வை கனல் கொண்டு

பொசுக்கிடுவாள்….


பட்டம் பெற்று

பதவியில் அமர்ந்து

சாதனைப்பெண்ணாய்

மின்னிடுவாள்…..


உதிரம் கொடுக்கும்

வலியினையும்

புன்னகையாலே

மறைத்திடுவாள்….


மணம் கொண்ட

மணாளனுக்காக

தனக்கென‌ வாழ

மறந்திடுவாள்….


உலகைக் காணும்

இன்னொரு உயிரை

உதிரம் கொடுத்து

பெற்றிடுவாள்…


தாய் பால் சுரந்த

நாள் முதலாய்

தாயாய் மட்டுமே

வாழ்ந்திடுவாய்…


பிள்ளையை காக்க

பூமனம் கொண்டவள்

பூகம்பம் வந்தாலும்

எதிர்த்திடுவாள்…


உடம்பும் மனமும்

வலி கொண்டு

 துடித்தாலும் கண்ணீருக்குள்

மறைத்திடுவாள்…


நரை கொண்டு

தரை தட்டி நடந்தாலும்

சிங்கப் பெண்ணாய்

ஜொலித்திடுவாள்…


விதியின் மதியால்

விண்ணுலகம் சென்றாலும்

மீண்டும் பெண்ணாய்

பிறந்திடுவாள்…..





பெண் ‌கவிதை

 பெண்ணே

உன் மீது அள்ளி வீசிய அனல் வார்த்தைகளை... 

 எச்சத்தில் கரைத்து

 மென்று முழுங்கி விடு...

   


விலை இல்லாமல்

 திணிக்கப்படும் வீண்பழிகளை..

   வெற்று புன்னகையில் 

மறைத்து ஒழித்து விடு...


அதிகார வர்க்கத்தால்

அவ மதிக்கப்பட்டாலும்

மரணம் வரும் வரை

மௌனித்து விடு..



         ஏனென்றால்

நீ ஒரு தாய்...

      உதிரத்தில் உதித்த முத்துக்களுக்காக..

மண் தின்னும் வரை

பெண் வார்த்தைக்குள்

        பொறுமையாய் புதைந்து விடு..