Wednesday, 22 April 2020

கனவுடன் ஓர் நாள்

     
    நித்திரையின் ஆழத்தில்
    நினைவுகளின் பாலத்தில்
    எண்ணங்களின் வண்ணத்தில்
    கனவொன்று பயணிக்க..
    
  
   நீங்காத நினைவுகளோ..
     கனவுகளை கரம் பிடித்து..
     காட்சிகளை பூ தொடுத்து..
     விழித்திரையில் படம் எடுக்க…


             இதோ கனவில் நான்...
              
       வெட்கம் கொண்ட வெள்ளி அருவி…
                 சாரல் கொண்டு எனைஅழைக்க..
                  அரவமில்லா அருவிக்கரையில்..
                 குளிரக்குளிர குளித்துக்கொண்டேன்


                  மணம் கொண்ட மலர்கள் எல்லாம்
                  கண்கள் தனை கொள்ளை கொள்ள..
                  தெற்கே வந்த தென்றல் தீண்டி
                  தேகம் அதை சிலிர்த்துக்கொண்டேன்..


                  ஆசை கொண்ட பொன்னுஞ்சல்.
                  ஆலமரத்தில் அசைந்தாட….
                  ஆனந்தமாய் ஏறி அதில்..
                   ஆசைதீர ஆடிக்கொண்டேன்…


             
                 மோகம் கொண்ட மேகம் தனில் 
                 மையல் கொண்டு மயங்கி நிற்க..
                  நித்திரையில் முத்திரையில்            
                 நினைவின்றி நிசப்தமானேன்...
     
                                 இரவு இறந்தது


                                  கனவும் முடிந்தது

நீங்கா நினைவுகள்